×

திருவாரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 1.98 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்ப பதிவு

*கலெக்டர் சாருஸ்ரீ தகவல்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கு முதல்கட்டமாக 380 ரேஷன் கடைகளுக்குரிய ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 712 குடும்ப அட்டைதாரர்களுக்கு பதிவு முகாம் நடைபெற்று வருவதாக கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் குடும்ப தலைவிக்கு, கலைஞர் மகளிர் உரிமை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கான விண்ணப்ப படிவம் பதிவு செய்யும் பணி, மாநிலம் முழுவதும் நேற்று தொடங்கியது. திருவாரூர் மாவட்டத்தில் விண்ணப்ப படிவம் பதிவு செய்யும் பணியை கலெக்டர் சாருஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி, திருவாரூர் நகராட்சியில் வேலுடையார் மேல்நிலைப்பள்ளி, முதலியார் தெரு பாவாகோபால்சாமி நகராட்சி தொடக்கப்பள்ளி உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.அதன்பிறகு அவர் கூறியதாவது:திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் 771 ரேஷன் கடைகளில் 3 லட்சத்து 91 ஆயிரத்து 748 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் முதல் கட்டமாக, இன்று (நேற்று) முதல் வரும் 4ம் தேதி வரை மன்னார்குடி, திருவாரூர், நீடாமங்கலம், வலங்கைமான் ஆகிய வருவாய் வட்டங்களில், அனைத்து கிராமங்களையும் உள்ளடக்கிய 380 ரேஷன் கடைப்பகுதிகளில் ஒரு லட்சத்து 98 ஆயிரத்து 712 குடும்ப அட்டைதாரர்களுக்கான விண்ணப்பப் பதிவு முகாம்கள் 524 இடங்களில் நடைபெற்று வருகிறது.

இப்பதிவு முகாம்களுக்கு 524 இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், 524 உதவி மைய அலுவலர்கள், 88 மண்டல அலுவலர்கள், 35 கண்காணிப்பு அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். குடும்ப அட்டை இருக்கும் ரேஷன் கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்பத்தலைவி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெறும் இடத்துக்கு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும்போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்க தேவையில்லை.

விண்ணப்பப் பதிவு முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்க வேண்டும். விண்ணப்பம் அளிக்கும் அனைத்து நபர்களின் விண்ணப்பங்களும் பதிவு செய்யப்படும். விண்ணப்பபதிவு ஞாயிற்றுக்கிழமை உள்பட முகாம் நடைபெறும் அனைத்து நாள்களிலும், காலை 9.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5.30 மணி வரையும் நடைபெறும். முகாம் நடைபெறும் குடியிருப்புகள், தெருக்கள், வார்டு, அவற்றுக்கான நாட்கள் குறித்த விவரங்கள் குடும்ப அட்டைதாரர்களின் சம்மந்தப்பட்ட ரேஷன் கடைகளில் தகவல் பலகையாக வைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் பதிவு முகாமுக்கு வரும் விண்ணப்பதாரர்களின் ஆதார் எண் பதியப்பட்டு, அவர்களின் விரல் ரேகை பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கப்படும். பயனாளிகளின் விரல் ரேகைப் பதிவு சரியாக அமையவில்லை எனில், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி வழியாக ஒருமுறை கடவுச்சொல் பெறப்படும்.

விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் தொலைபேசி எண் இணைக்கப்பட்டிருந்தால், அந்த கைபேசியை முகாமுக்கு எடுத்து வருவது விண்ணப்பப் பதிவை எளிமைப்படுத்தும். இதுகுறித்து, சந்தேகங்கள் ஏதும் இருப்பின் கலெக்டர் அலுவலகக் கட்டுப்பாட்டு அறையை 04366-1077 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ கூறினார்.ஆய்வின்போது ஆர்டிஓ சங்கீதா, தாசில்தார் நக்கீரன், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக 1.98 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்ப பதிவு appeared first on Dinakaran.

Tags : Tiruvarur district ,Sarusree ,Tiruvarur ,Dinakaran ,
× RELATED திருவாரூர் அருகே போலீசார் அதிரடி